search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு விநாயகர் சிலை"

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணியினர் மனு கொடுப்பதற்காக விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இந்து முன்னணி அமைப்பு கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் விநாயகர் சிலைகளுடன் இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர், ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக வந்தனர்.

    கலெக்டர் அலுவலக மேம்பாலத்திற்குள் புகுந்து ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினரை, டி.எஸ்.பி. அலெக்ஸ் மேற்பார்வையில் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான ஏராளமான போலீசார், பேரிகார்ட்டுகளை வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல இந்து முன்னணியினர் ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீஸ் அறிவுறுத்தியது. இதையடுத்து கோட்ட தலைவர் மகேஷ் உள்பட சிலர், கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்ட அரங்கிற்கு சென்று விநாயகர் சிலை கையில் கோரிக்கை மனுவை வைத்து அதிகாரிகளிடம் வழங்கினர்.

    அந்த மனுவில், தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பல ஆண்டுகளாக அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரு அரசாணை மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை சாதாரண மக்கள் கொண்டாட முடியாத அளவிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது இந்து மக்களுக்கு மத வழி பாட்டு உரிமையை மறுப்பு போல் உள்ளது.

    விநாயகர் சிலையை வைக்க கலெக்டர், வருவாய் கோட்டாட்சியரிடம் தான் அனுமதி பெறவேண்டும் என்று காவல்துறையினர் கூறி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை சாமானிய மக்களும் கொண்டாட வழி வகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    ×